என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "விவசாயிகள் எதிர்ப்பு"
சேத்துப்பட்டு:
சேலத்தில் அ.தி.மு.க. கூட்டணி சார்பில் நடந்த பிரசார பொதுக்கூட்டத்தில், மத்திய சாலை மற்றும் போக்குவரத்து துறை அமைச்சர் நிதின் கட்கரி கலந்து கொண்டார். அப்போது அவர் விவசாயிகளின் ஆதரவு பெற்று 8 வழிச்சாலை திட்டம் குறிப்பிட்ட தேதியில் தொடர நடவடிக்கை எடுக்கப்படும் என கூறினார்.
இதை கண்டித்து திருவண்ணாமலை மாவட்டம் பெரணமல்லூர் அடுத்த நம்பேடு கிராமத்தில் சென்னை- சேலம் 8 வழிச்சாலை எதிர்ப்பு இயக்கம் சார்பில் விவசாயிகள் கையில் கருப்புக்கொடி ஏந்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது 8 வழிச்சாலை திட்டம் தொடரும் என பேசிய மத்திய அமைச்சர் நிதின் கட்கரி மற்றும் மத்திய, மாநில அரசுகளை கண்டித்து கோஷம் எழுப்பினர்.
விவசாயிகளின் இந்த திடீர் ஆர்ப்பாட்டத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
திருவண்ணாமலை:
திருவண்ணாமலை, தண்டராம்பட்டு, ஆரணியில் தினகரன் பிரசாரம் செய்தார். அப்போது அவர் பேசியதாவது:-
திருவண்ணாமலை என்பது ஒரு அக்னி ஸ்தலம். தீயவர்களையும், துரோகம் செய்பவர்களையும் அழித்துவிடும் அக்னியாக உள்ள இந்த தொகுதி மக்கள் தமிழ்நாட்டு மக்களுக்கு துரோகம் செய்பவர்களை அக்னியாக இருந்து அழிக்க வேண்டும். அ.தி.மு.க. மெகா கூட்டணி சார்பில் இந்த தொகுதியில் அக்ரி கிருஷ்ணமூர்த்தியை வேட்பாளராக நிறுத்தியுள்ளனர்.
மதச்சார்பற்ற கூட்டணி என்று தி.மு.க. சார்பில் கூறுகிறார்கள். கடந்த 15 ஆண்டு காலமாக காங்கிரஸ் மற்றும் பா.ஜ.க. ஆட்சியில் மத்தியில் ஆட்சி அதிகாரத்தில் இருந்து மக்களை புறம்தள்ளி தனது குடும்பத்தார் மற்றும் உறவினர்களையே பாதுகாத்தவர்கள் இவர்கள். இவர்களின் கூட்டணி கட்சியான காங்கிரஸ் கட்சி கர்நாடகாவில் ஆட்சிக்கு வந்தால் காவிரி மேலாண்மை வாரியத்தை கலைத்து விடுவேன் என தேர்தல் அறிக்கையில் கூறியுள்ளது.
8 வழி சாலை திட்டம் தற்போது நீதிமன்றத்தால் ரத்து செய்யப்பட்டுள்ளது. மத்திய மந்திரி நிதின்கட்காரி சேலத்தில் நடைபெற்ற கூட்டத்தில் முதல் -அமைச்சர் முன்னிலையிலேயே விவசாயிகள் ஆலோசனை பெற்று மீண்டும் 8 வழி சாலை திட்டத்தை நிறைவேற்றுவேன் என கூறும் போது முதல் - அமைச்சர் வாய்மூடி கொண்டு அமர்ந்துள்ளார். இந்த 8 வழி சாலையானது 5 மாவட்ட விவசாயிகள் மற்றும் நீர் ஆதாரங்களை அழித்து தனியார் நிறுவனத்திற்காக அமைக்கப்படும் சாலை. மத்திய மந்திரி தேர்தல் நேரத்தில் எவ்வளவு தைரியமாக 8 வழி சாலையை அமைத்தே தீருவேன் என கூறுகிறார். இதனால் விவசாயிகள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
இந்த பகுதி மக்கள் அ.தி.மு.க.விற்கு வாக்களித்தால் இந்த பகுதி விவசாயத்தையும், பசுமையையும் அழித்து விடுவார்கள். இந்த 8 வழி சாலை வருவதால் தொழில் வளர்ச்சி பெறும் என சட்டமன்றத்தில் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் பேசியுள்ளார். 8 வழி சாலை திட்டத்தை வரவேற்பதன் மூலம் தி.மு.க., பா.ஜ.க. உடன் மறைமுக கூட்டணி வைத்துள்ளது தெள்ளத்தெளிவாக தெரிகிறது. 8 வழி சாலையை எதிர்த்து அ.ம.மு.க. பல்வேறு போராட்டங்களை முன்னின்று நடத்தி உள்ளது. நீதிமன்றமே தடைவிதித்த அந்த 8 வழி சாலை திட்டத்தை நிறைவேற்றுவேன் என மத்திய மந்திரி கூறுவது தமிழ்நாட்டிற்கு துரோகம் செய்வது போன்றது.
ஏற்கனவே ஆர்.கே. நகரில் ஓட்டுக்கு 6 ஆயிரம் ரூபாய் கொடுத்து அ.தி.மு.க.வால் ஆட்சிக்கு வர முடியவில்லை. ஜெயலலிதாவின் உண்மையான தொண்டர்களான நமக்குத்தான் அந்த மக்கள் வெற்றியை தந்தார்கள்.
இவ்வாறு அவர் பேசினார். #dinakaran #edappadipalanisamy #nitingadkari
சீர்காழி:
நாகை மாவட்டம் சீர்காழி அருகே பழையபாளையம் கிராமத்தில் ஓ.என்.ஜி.சி நிறுவனம் சார்பில் 20க்கும் மேற்பட்ட ஆழ்துளைக் கிணறுகள் அமைத்து கச்சா எண்ணெய் எடுக்கப்பட்டு வருகிறது. இங்கு எடுக்கப்படும் திரவ நிலையிலான எரிவாயு வர்த்தக நிறுவனங்களுக்கு கொண்டு செல்ல வேட்டங்குடி, எடமணல், திருநகரி ஊராட்சிகள் வழியாக தரங்கம்பாடி தாலுக்கா மேமாத்தூருக்கு 27 கிலோ மீட்டர் தொலைவுக்கு விளைநிலங்கள் வழியாக குழாய் அமைக்கும் பணி கெயில் நிறுவனத்தால் தொடங்கப்பட்டு நடைபெற்று வருகிறது.
வேம்படி கிராமத்தில் விளைநிலங்களில் எரிவாயு குழாய் பதிக்கும் பணி நடந்தபோது விவசாயிகள் தரப்பில் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்நிலையில் வேம்படி கிராமத்திலிருந்து 2 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள வேட்டங்குடி கிராமத்தில் தனியாருக்கு சொந்தமான இடத்தில் கெயில் நிறுவனம் சார்பில் லாரிகளில் கொண்டு வந்த 26 இரும்பு குழாய்களை 50-க்கும் மேற்பட்ட போலீசார் உதவியுடன் லாரியிலிருந்து இறக்கும் பணியில் அதிகாரிகள், ஊழியர்கள் ஈடுபட்டனர். அப்போது வேட்டங்குடியைச் சேர்ந்த நஞ்சை, புஞ்சை விவசாயிகள் சங்கத்தலைவர் வில்வநாதன், தி.மு.க. மாவட்ட பிரதிநிதி அங்குதன் மற்றும் விவசாயிகள் சம்பவ இடத்திற்கு வந்து இரும்பு குழாய்களை இறக்க எதிர்ப்பு தெரிவித்தனர்.
இதையடுத்து பேச்சு வார்த்தை நடத்தி பின்னர் இது குறித்து முடிவு செய்வதாக கூறி இரும்பு குழாய்கள் இறக்கப்படாமல் லாரிகளிலேயே வைக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவத்தினால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
சென்னை:
மக்கள் நீதி மய்யம் கட்சியின் துணைத் தலைவர் டாக்டர் ஆர்.மகேந்திரன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
விவசாய நிலங்களில் ஏற்கனவே அமைக்கப்பட்டுள்ள மின் கோபுரங்களுக்காக, உரிய இழப்பீடு தொகை வழங்கப்படாமல் உள்ள நிலையில், தற்போது மீண்டும் உயர்மின் கோபுரங்கள் அமைக்கப்பட்டு வருவதை மக்கள் நீதி மய்யம் கட்சி கடுமையாக கண்டிக்கிறது.
தமிழக விவசாயிகளின் நலன் பல்வேறு வகைகளில் தொடர்ந்து பாதிக்கப்பட்டு வருகிறது. பொன் கொடுக்கும் விவசாய பூமியின் மீது போர் தொடுக்கப்படுகிறது. கெயில், ஹைட்ரோகார்பன், மீத்தேன் என்று அனைத்து திட்டங்களிலும் விவசாயி நலன் மற்றும் விவசாய வளம் பாதிப்பிற்குள்ளாகியே வருகிறது.
தொடர்ந்து விவசாயிகளின் வாழ்வாதாரம் அவர்களிடம் இருந்து பறிக்கப்பட்டு, அவர்களின் விளை நிலங்களும் அபகரிக்கப்பட்டு உயிர்விடும் சூழலில் இருக்கின்றார்கள். இந்த நிலையில் உயர்மின் கோபுரங்களுக்காகவும், விவசாயிகள் இன்னும் ஒரு இன்னலை, இந்த இக்கட்டான சூழலில் சந்திப்பது மிகவும் கவலை அளிக்கிறது.
எப்பொழுதும் காட்டும் அலட்சியப்போக்கினை இம்முறையாவது அரசு தவிர்த்திட வேண்டும்.
உயர்மின் கோபுரங்களுக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகளை, அரசு பேச்சுவார்த்தைக்கு நேரில் அழைத்திட வேண்டும். அவர்களின் கோரிக்கைகளுக்கு அரசு செவிசாய்த்து அவற்றை நிறைவேற்றிட வழி செய்திட வேண்டும். மக்கள் நீதி மய்யம் தமிழக விவசாயிகளுடன் என்றும் துணை நிற்கும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார். #makkalneethimaiyam
பல்லடம்:
விளை நிலங்கள் வழியாக உயர் அழுத்த மின் கோபுரம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து கோவை, திருப்பூர், ஈரோடு உள்ளிட்ட 13 மாவட்ட விவசாயிகள் தொடர் காத்திருப்பு போராட்டம் மற்றும் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டனர்.
கோவை மாவட்டத்தில் சுல்தான் பேட்டை, திருப்பூர் மாவட்டத்தில் பல்லடம் அருகே உள்ள கள்ளிப்பாளையம் ஆகிய இடங்களில் இந்த போராட்டம் நடைபெற்றது.நேற்று 14-வது நாளாக காத்திருப்பு போராட்டமும், 8-வது நாளாக உண்ணாவிரதமும் நடைபெற்றது. திருப்பூர் மாவட்டம் கள்ளிப்பாளையத்தில் நடைபெற்ற போராட்டத்தில் பங்கேற்ற விவசாயிகள் தாராபுரம் ராசு, பெருமாநல்லூர் தனபால், மேற்கு சடையம் பாளையம் பச்சியப்பன் ஆகியோர் மொட்டை அடித்தனர்.
பின்னர் ஆண்கள், பெண்கள் என 500-க்கும் மேற்பட்டோர் உண்ணாவிரத பந்தலில் இருந்து ஊர்வலமாக அப்பகுதியில் உள்ள விநாயகர், அம்மன் கோவிலுக்கு சென்றனர்.
அங்கு சுவாமியிடம் மனு அளித்தனர். இது குறித்து விவசாயிகள் கூறும் போது, விளை நிலங்கள் வழியாக உயர் அழுத்த மின் கோபுரம் அமைக்க தடை விதிக்க கோரி அரசியல்வாதிகள், அதிகாரிகளிடம் மனு அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
இதனால் தான் சுவாமியிடம் மனு அளித்தோம் என்றனர்.
காத்திருப்பு மற்றும் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள் நேற்று மாலை 5 மணிக்கு தங்கள் போராட்டத்தை வாபஸ் பெற்றனர்.
அவர்களுக்கு விவசாயிகள் போராட்ட கூட்டு இயக்க தலைவர் கொங்கு ராஜாமணி மற்றும் ஒருங்கிணைப்பாளர்கள் பழரசம் கொடுத்து உண்ணாவிரதத்தை முடித்து வைத்தனர்.
அடுத்த கட்டமாக விவசாயிகள் வருகிற 3-ந் தேதி சட்டசபையை முற்றுகையிட உள்ளனர். இதற்காக நாளை அவர்கள் சென்னை புறப்பட்டு செல்கிறார்கள். சட்டசபை முற்றுகை போராட்டத்திலும் வெற்றி கிடைக்காவிட்டால் வேறு மாதிரியான போராட்டம் நடைபெறும் என விவசாயிகள் சங்கத்தினர் தெரிவித்தனர்.
முன்னதாக உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகளை பா.ம.க. இளைஞர் அணி தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ், பா.ம.க. தலைவர் ஜி.கே. மணி, முன்னாள் மத்திய மந்திரி மூர்த்தி, மாநில துணைத் தலைவர் பொங்கலூர் மணிகண்டன் ஆகியோர் சந்தித்து ஆதரவு தெரிவித்தனர்.
பின்னர் அன்புமணி ராமதாஸ் நிருபர்களிடம் கூறியதாவது-
மற்ற மாநிலங்களில் பூமிக்கு அடியில் மின்சாரம் கொண்டு செல்வது போல் தமிழகத்திலும் கொண்டு செல்ல வேண்டும். விவசாயத்தை அழிக்கும் எந்த வளர்ச்சி திட்டமும் தேவை இல்லை.
ஆந்திரா, குஜராத் போன்ற மாநிலங்களில் ஆற்றின் குறுக்கே அணை கட்டி விவசாயத்தை வளர்க்கிறார்கள். தமிழகத்தில் மட்டும் இந்த அரசு விவசாயத்தை அழித்து வருகிறது. கடந்த 20 ஆண்டுகளாக விவசாயத்திற்கு தனி பட்ஜெட் போட வேண்டும் என பா.ம.க. வலியுறுத்தி வருகிறது.
விவசாயத்திற்காக 4 அமைச்சர்கள் நியமிக்க வேண்டும். வேளாண்மை, தோட்டக் கலைத்துறை, நீர்வளம், நீர் மேலாண்மை ஆகிய துறைகளுக்கு தனி அமைச்சர்கள் நியமிக்க வேண்டும்.
நமது முன்னோர்கள் தீட்டிய முன்னோடி திட்டங்களை செயல்படுத்த வேண்டும். அத்திக்கடவு-அவினாசி திட்டம், பரம்பிக்குளம் -ஆழியாறு திட்டம், ஆனைமலையாறு - நல்லாறு திட்டம் உள்ளிட்டவைகளை நிறைவேற்ற வேண்டும். இல்லா விட்டால் விவசாயத்தை பெருக்க முடியாது.வருகிற 3-ந் தேதி விவசாயிகள் சட்டசபையை முற்றுகையிடும் போராட்டத்திற்கு பா.ம.க. ஆதரவு அளிக்கிறது. விவசாயிகள் போராட்டத்திற்கு பா.ம.க. துணை நிற்கும்.
இவ்வாறு அவர் கூறினார். #Farmersstruggle
தமிழகத்தில் விவசாய விளைநிலங்களின் வழியாக உயர் மின் கோபுர பாதை அமைத்து மின்சாரம் கொண்டு செல்வதற்கு எதிர்ப்பு தெரிவித்து 8 மாவட்ட விவசாயிகள் கடந்த 17-ந் தேதி முதல் தொடர் காத்திருப்பு போராட்டம் நடத்தி வருகிறார்கள்.
கேரளாவில் உள்ளதைபோல் சாலையோரம் கேபிள் மூலம் தமிழகத்தில் மின்சாரப் பாதை அமைத்து கொண்டு செல்ல வேண்டும் என்பதை வலியுறுத்தி இந்த போராட்டம் நடந்து வருகிறது.
கோவையில் சுல்தான்பேட்டையிலும், திருப்பூர் மாவட்டத்தில் பல்லடம் கள்ளிப்பாளையத்திலும் போராட்டம் நடைபெற்று வருகிறது.
பல்லடத்தில் விவசாயிகள் கூட்டமைப்பு சார்பில் தமிழ்நாடு விவசாயிகள் பாதுகாப்பு சங்க தலைவர் கொங்கு ராஜாமணி தலைமையில் போராட்டம் நடந்து வருகிறது. கடுங்குளிர் மற்றும் கடும் பனிப்பொழிவு ஆகியவற்றை பொருட்படுத்தாமல் விவசாயிகள் போராட்ட பந்தலிலேயே தங்கி அங்கேயே சமையல் செய்து சாப்பிட்டு போராட்ட பந்தலில் படுத்து உறங்கினர்.
காலையில் பந்தலில் அமர்ந்து காத்திருப்பு போராட்டத்தை தொடர்ந்து நடத்தி வந்தனர்.
இதற்கிடையே கடந்த 23-ந்தேதி முதல் தமிழ்நாடு விவசாயிகள் பாதுகாப்பு சங்க தலைவர் கொங்கு ராஜாமணி, விஸ்வநாதன், பச்சியப்பன், பால்ராஜ், சிவக்குமார், நாச்சிமுத்து ஜெயக்குமார் உள்ளிட்ட விவசாயிகள் 16 பேர் தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
சுல்தான்பேட்டையில் 17 பேரும் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இந்த தொடர் உண்ணாவிரதப்போராட்டம் இன்று 4- வது நாளாக நடை பெற்று வருகிறது. விவசாயிகள் காத்திருப்பு போராட்டம், உண்ணாவிரதம் என தனித்தனியாக போராட்டம் நடத்தி வருகிறார்கள்.
காத்திருப்பு தொடர் போராட்டத்தில் போராட்ட பந்தலின் முன்பு, விவசாயிகள்தூக்கு போட்டுக்கொண்டு நூதன போராட்டம் நடத்தினர்.
காத்திருப்பு தொடர் போராட்டத்தை இதுவரை கண்டுகொள்ளாத மத்திய, மாநில அரசுகளை கண்டித்து கோஷம் எழுப்பினர்.
காலவரையற்ற உண்ணாவிரதத்தில் பங்கேற்ற விவசாயிகள் சிவக்குமார் (தாராபுரம்), ஜெயக்குமார் (குள்ளாயிபாளையம்), நாச்சிமுத்து (வஞ்சிபாளையம்) ஆகியோரின் உடல்நிலை மோசமடைந்தது. இதை தொடர்ந்து அவர்களுக்கு உண்ணாவிரத பந்தலிலேயே குளுக்கோஸ் செலுத்தப்பட்டது.
உண்ணாவிரதத்தில் ஈடுபட்டவர்களை தனியார் மருத்துவக் குழுவினர் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர். மற்றும் தனியார் ஆம்புலன்ஸ் வாகனம் தயார் நிலையில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
சென்னை:
சென்னை-சேலம் இடையே 277 கி.மீ தூரத்துக்கு 8 வழி பசுமை சாலைத்திட்டம் அமைக்கப்பட உள்ளது. சுமார் 10 ஆயிரம் கோடி ரூபாய் செலவில், ‘‘பாரத்மலா பரியோனா திட்டம்’’ கீழ் அமல்படுத்தப் படுத்தப்பட இருக்கும் இந்த பசுமை வழிச்சாலை காஞ்சீபுரம், திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம் மாவட்டங்களில் அமைய உள்ளது. இந்த சாலைத் திட்டத்துக்கு சுமார் 1900 ஹெக்டேர் நிலம் கையகப்படுத்தப்பட உள்ளது.
இந்த பசுமை வழிச் சாலைத் திட்டத்துக்கு விவசாயிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். தங்கள் வாழ்வாதார நிலத்தை மத்திய- மாநில அரசுகள் பறிக்க கூடாது என்று போராட்டங்கள் நடத்தினார்கள். ஆனால் அதையும் மீறி பல இடங்களில் நிலம் கையகப்படுத்தும் பணியை அதிகாரிகள் மேற்கொண்டனர்.
கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், திருவண்ணாமலை மாவட்டங்களில் பல இடங்களில் நிலம் அளவிடப்பட்டு கற்கள் பதிக்கப்பட்டன. இதை எதிர்த்து பாதிக்கப்பட்ட விவசாயிகள் சார்பில் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. இதனால் பசுமை வழிச்சாலைத் திட்டத்துக்கு நிலம் கையகப்படுத்துவது தற்காலிகமாக நிறுத்தப்பட்டது.
தற்போது இந்த வழக்கு சென்னை ஐகோர்ட்டில் நீதிபதிகள் டி.எஸ்.சிவஞானம், பவானி சுப்பராயன் ஆகியோர் கொண்ட டிவிசன் பெஞ்சில் நிலுவையில் உள்ளது.
கடந்த செப்டம்பர் மாதம் 15-ந்தேதி சென்னை ஐகோர்ட்டில் இந்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டபோது, மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சகம் சார்பில் அட்வகேட் ஜெனரல் ராஜகோபாலன் ஆஜரானார். அப்போது அவர் கூறுகையில், ‘‘8 வழி பசுமை சாலைத்திட்டத்தை மறுவரையறை செய்ய உள்ளோம். அதுவரை இந்த திட்டத்துக்காக நிலம் கையகப்படுத்தப்பட மாட்டாது’’ என்றார்.
இதை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள் சில புதிய உத்தரவுகளை பிறப்பித்தனர். ‘‘தேசிய நெடுஞ்சாலைத் திட்டத்தின் கீழ் அறிக்கை வெளியிட்டு நிலம் கையகப்படுத்தக் கூடாது’’ என்று தடை விதித்தனர்.
இந்த நிலையில் சென்னை-சேலம் இடையே 8 வழி பசுமை சாலைத் திட்டத்தை நிறைவேற்ற மத்திய சாலைப் போக்கு வரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சகம் தீவிரமாகி உள்ளது. காஞ்சீபுரம், திருவண்ணாமலை, தர்மபுரி, கிருஷ்ணகிரி, சேலம் மாவட்டங்களில் பசுமை வழி சாலைத்திட்டத் துக்கு நிலம் கையகப்படுத்த புதிய அறிவிக்கை வெளியிட்டு வருகிறது. மூன்று நாட்களுக்கு முன்பு தர்மபுரி, கிருஷ்ண கிரி, சேலம் மாவட்டங்களில் நிலத்தை கையகப்படுத்த புதிய அறிக்கை வெளியிடப்பட்டது.
தேசிய நெடுஞ்சாலைத் திட்டம் 1956-ன்படி இந்த அறிவிக்கை வெளியிடப்பட்டுள்ளது. இதன்மூலம் இந்த மூன்று மாவட்டங்களிலும் பசுமை வழி சாலைத் திட்டத்துக்கு கையகப்படுத்த வேண்டிய மீதமுள்ள நிலங்களை கையகப்படுத்தும் நடவடிக்கைகள் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதற்கிடையே காஞ்சீபுரம் மாவட்டத்தில் பசுமை வழி சாலைத் திட்டத்துக்காக கையகப்படுத்தப்பட வேண்டிய நிலம் தொடர்பாகவும் மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சகம் புதிய அறிவிக்கையை வெளியிட்டுள்ளது. காஞ்சீபுரம் மாவட்டத்தில் மொத்தம் 59.28 கி.மீ தொலைவுக்கு நிலத்தை கையகப்படுத்துவதற்கான உத்தரவாக அந்த அறிவிக்கை அமைந்துள்ளது.
அதன்படி ஸ்ரீபெரும் புதூர், செங்கல்பட்டு, உத்திர மேரூர் தாலுக்காக்களில் உள்ள நிலங்கள் கையகப்படுத்தப்பட உள்ளன. 39 கிராமங்கள் வழியாக இந்த சாலை அமைய உள்ளதால் இந்த 3 தாலுக்காக்களிலும் மக்கள் பயன்படுத்தும் நிலங்கள் கையகப்படுத்தப்படும் என்று தெரியவந்துள்ளது.
39 கிராமங்களிலும் 1510 பேரின் நிலம் பசுமை வழி சாலைத் திட்டத்துக்கு எடுக்கப்பட உள்ளது. மத்திய அரசின் புதிய அறிவிக்கை காஞ்சீபுரம் மாவட்ட மக்களிடம் கடும் அதிர்ச்சியையும் அதிருப்தியையும் ஏற்படுத்தி உள்ளது.
பசுமை சாலை திட்டம் தொடர்பான வழக்கு சென்னை ஐகோர்டில் உள்ள நிலையில் புதிய அறிவிக்கை மூலம் இந்த திட்டத்தை நிறைவேற்ற மத்திய அரசு தீவிரமாகியுள்ளது. இந்த திட்டத்தால் பொருளாதார வளர்ச்சி ஏற்படும் என்று கூறப்படுவதால் தமிழக அரசும் இந்த திட்டத்துக்கு முழு ஆதரவு தெரிவித்து உள்ளது. எனவே நிலம் கையகப்படுத்தும் பணி விரைவில் தொடங்கும் என்று தெரிகிறது. #chennaisalemexpressway
தமிழகத்தில் தஞ்சை- மதுரை, சென்னை-சேலம், கரூர்-கோவை உள்ளிட்ட 9 பசுமை வழிச்சாலை திட் டங்களுக்கு ரூ.43 ஆயிரம் கோடியை மத்திய அரசு ஒதுக்கீடு செய்துள்ளது. இதற் காக நிலம் கையகப்படுத்தும் பணிகள் அந்தந்த பகுதிகளில் நடந்து வருகிறது.
சென்னை-சேலம் இடையே 8 வழி பசுமைச் சாலைக்கு நிலம் கையகப்படுத்தும் பணிக்கு விவசாயிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டனர். விவசாயிகள் வழக்கு தொடர்ந்ததால் பணியை தொடர ஐகோர்ட்டு தடை விதித்தது.
இந்தநிலையில் தஞ்சையில் இருந்து புதுக்கோட்டை வழியாக மதுரைக்கு 4 வழிச்சாலை அமைப்பதற்காக நிலம் கையகப்படுத்த அளவீடு செய்யும் பணி சில மாதங்களாக நடைபெற்று வருகிறது. இந்த பணியில் நெடுஞ்சாலைத்துறை பணியாளர்கள் ஈடுபட்டுள்ளனர்.
தஞ்சை-மதுரை இடையேயான 200 கிலோ மீட்டர் தொலைவுள்ள நிலங்களை அளவீடு செய்யும் பணிக்காக 6 குழுக்களில் 50 பேர் இடம் பெற்றுள்ளனர். கந்தர்வக்கோட்டை, ஆதனக்கோட்டை, பெருங்களூர், புதுக்கோட்டை, திருவரங்குளம் பகுதியில் உள்ள நிலங்களில் அளவீடு செய்து கற்களை ஊன்றி அதில் மஞ்சள் வர்ணத்தை பூசி வருகின்றனர். இதையறிந்ததும் பாதிப்புக்கு உள்ளாகும் நிலங்களின் விவசாயிகள் கலக்கமடைந்துள்ளனர்.
திருவரங்குளம், பெரிய நாயகிபுரம், தோப்புக் கொல்லை கிராமங்களில் உள்ள விவசாயிகள் பம்பு செட் பாசனம் மூலம் வெண்டை, கத்திரி போன்ற காய்கறிகளை சாகுபடி செய்துள்ளனர். அறுவடைக்கு தயாராக இருக்கும் நிலையில் இவர்களுடைய நிலங்களில் கற்கள் பதிக்கப்பட்டுள்ளதால் விவசாயிகள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
இது தொடர்பாக தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தை எதிர்த்து ஏற்கனவே ஐகோர்ட் கிளையில் வழக்கு தொடர்ந்துள்ள சமூக ஆர்வலர் பாஸ்கர் கூறுகையில், தற்போது புழக்கத்தில் உள்ள சாலையை 4 வழிச்சாலையாக மாற்றுவதற்கு போதுமான இடவசதி உள்ளது. அதை தவிர்த்து விட்டு வேண்டுமென்றே விவசாய நிலங்களை கையகப்படுத்தி வருகின்றனர்.
ஏற்கனவே பல ஆண்டுகளாக புதுக்கோட்டை மாவட்டத்தில் மழை பெய்யாததால் விவசாயிகள் வாழ்வாதாரத்தை இழந்து தவித்து வந்தனர். தற்போது அவர்கள் நிலத்தையும் இழந்துவிட்டால் வாழமுடியாத நிலை ஏற்படும். எனவே விவசாயிகளுக்கு நியாயமான நீதி கிடைக்க தேவையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார். #Farmers #Opposition
சென்னை:
சென்னையில் இருந்து சேலத்துக்கு ஆத்தூர், உளுந்தூர்பேட்டை வழியாக ஒரு பாதையும், வேலூர், கிருஷ்ணகிரி வழியாக ஒரு பாதையும் ஏற்கனவே உள்ளன.
இருபாதைகளுமே மிகவும் சுற்றி செல்பவையாக இருக்கின்றன. எனவே, 3-வது பாதையாக சென்னையில் இருந்து போளூர், திருவண்ணாமலை, சேத்துப்பட்டு, அரூர் வழியாக கல்வராயன் மலையை கடந்து புதிய சாலை அமைக்க திட்டமிடப்பட்டது.
277 கி.மீட்டர் நீளம் கொண்ட இந்த சாலையை 8 வழி பாதையாக அமைக்க முடிவு செய்யப்பட்டது. மத்திய அரசின் தேசிய நெடுஞ்சாலைத்துறை இந்த சாலையை ரூ.10 ஆயிரம் கோடி செலவில் அமைக்க ஏற்பாடுகள் செய்தது.
சாலைக்கான நிலத்தை கையகப்படுத்தும் பணி தொடங்கப்பட்டது. சாலை மொத்தம் 5 மாவட்டங்கள் வழியாக செல்கிறது. அனைத்து மாவட்டங்களிலும் நிலம் கையகப்படுத்துவதற்காக அளவீடு பணிகள் மேற் கொள்ளப்பட்டன.
ஆனால், இதற்கு சம்பந்தப்பட்ட விவசாயிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும் சுற்றுச்சூழல்கள், விவசாயம் கடுமையாக பாதிக்கப்படும் என கூறி பல்வேறு அமைப்புகளும், அரசியல் கட்சிகளும் 8 வழிச்சாலை திட்டத்துக்கு போர்க்கொடி உயர்த்தின.
திட்டத்தை எதிர்த்து 12 வழக்குகள் சென்னை ஐகோர்ட்டு உள்ளிட்ட பல்வேறு கோர்ட்டுகளில் தாக்கல் செய்யப்பட்டன. மேலும் மத்திய சுற்றுச்சூழல் துறையிடம் புகார் தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து மத்திய சுற்றுச்சூழல் துறை ஏற்கனவே தேசிய நெடுஞ்சாலைத்துறையிடம் பாதிப்புகளை குறைத்து பணிகளை செய்வதற்கு உத்தரவிட்டது.
இதன் காரணமாக சாலை பணிகளில் பல மாற்றங்களை தேசிய நெடுஞ்சாலைத்துறை உருவாக்கியது.
ஏற்கனவே வனப்பகுதி அல்லாத இடங்களில் 90 மீட்டர் அகலத்துக்கு சாலை அமைக்க திட்டமிடப்பட்டு இருந்தது. அது, 70 மீட்டராக குறைக்கப்பட்டது. வனப்பகுதியில் 50 மீட்டராக குறைக்கப்பட்டது.
மேலும் வனப்பகுதியில் 13¼ கி.மீட்டர் தூரத்துக்கு சாலை அமைக்க முடிவு செய்யப்பட்டு இருந்தது. அது, 9 கி.மீட்டராக குறைக்கப்பட்டது. இத்துடன் வனப்பகுதியில் 120 ஹெக்டேர் நிலம் சாலைக்காக பயன்படுத்த முடிவு செய்யப்பட்டு இருக்கிறது. அது, 45 ஹெக்டேராக குறைக்கப்பட்டது.
ஆனாலும் கூட, இந்த சாலை திட்டத்துக்கு தொடர்ந்து எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. ஐகோர்ட்டில் நடந்த வழக்கு விசாரணைகளிலும் நீதிபதிகள் பல்வேறு உத்தரவுகளை பிறப்பித்த வண்ணம் உள்ளனர்.
இதையடுத்து மத்திய சுற்றுச்சூழல் துறையின் மதிப்பீட்டு நிபுணர்கள் குழு இது சம்பந்தமாக மீண்டும் ஆய்வு செய்தது. இதற்கான கூட்டம் கடந்த 30, 31-ந் தேதிகளில் நடந்தன.
அப்போது இந்த சாலை பணிகள் தொடர்பாக விரிவாக ஆலோசிக்கப்பட்டது. அதில், பல்வேறு முடிவுகளை எடுத்துள்ளனர்.
அதன்படி சாலை அமைப்பது தொடர்பாக புதிதாக 2 விதமான ஆய்வுகளை நடத்த வேண்டும் என்று தேசிய நெடுஞ்சாலைத் துறைக்கு மத்திய சுற்றுச் சூழல்துறை மதிப்பீட்டு நிபுணர் குழு உத்தரவிட்டுள்ளது.
மலைப்பகுதியில் சுற்றுச் சூழல் முறைகள் பாதிக்காமல் இருக்கவும், சமூக பொருளாதார நிலைகள் பாதிக்கப்படாமல் இருக்கவும், அதற்கு தகுந்த மாதிரி இந்த ஆய்வுகளை மேற்கொள்ள வேண்டும்.
அரசின் பொருத்தமான நிறுவனங்கள் மூலம் இந்த ஆய்வுகளை செய்ய வேண்டும் என்றும் அந்த உத்தரவில் கூறப்பட்டுள்ளது.
இதுபோன்ற ஆய்வுகளை செய்யக்கூடிய தகுதி உள்ள அரசு நிறுவனங்களாக தேசிய சுற்றுச்சூழல் அரசு ஆராய்ச்சி மையம், ஜி.பி. பந்த் தேசிய இமாலயன் சுற்றுச்சூழல் வளர்ச்சி நிறுவனம் ஆகியவை உள்ளன.
இந்த நிறுவனங்களில் ஏதாவது ஒன்றிடம் இந்த பணிகளை ஒப்படைக்கலாம் என்றும் அந்த குழு யோசனை தெரிவித்துள்ளது.
இதுபற்றி முழுமையாக ஆய்வு செய்து மத்திய சுற்றுச்சூழல் நிபுணர் குழுவுக்கு அறிக்கை தர வேண்டும் என்றும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனால் தேசிய நெடுஞ்சாலைத்துறை 8 வழிச்சாலை திட்டம் தொடர்பாக இன்னும் 2 வகையான ஆய்வுகளை மேற்கொள்ள வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.
எனவே, 8 வழிச்சாலை திட்டத்தில் இன்னும் பல மாறுதல்கள் வருவதற்கு வாய்ப்பு இருக்கிறது. இதன் காரணமாக சாலை அமைக்கும் பணி நடப்பதற்கு மிகவும் கால தாமதம் ஆகும் என்று எதிர் பார்க்கப்படுகிறது.
புதிய ஆய்வுகள் மேற்கொள்ள உத்தரவிடப்பட்டாலும் ஏற்கனவே கோர்ட்டில் வழக்குகள் உள்ள தால் அதன் தீர்ப்புக்கோ அல்லது நடுவர்மன்ற தீர்ப்புகளுக்கோ கட்டுப்பட வேண்டும் என்றும் அந்த உத்தரவில் கூறப்பட்டு இருக்கிறது. #GreenExpressway #HC
கூடலூர்:
மதுரை மாநகரின் குடிநீர் தட்டுப்பாட்டை போக்க முல்லைபெரியாற்றில் இருந்து சிறப்பு கூட்டுகுடிநீர் திட்டத்தை முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்தார். இதனைதொடர்ந்து கூடலூர் அருகே லோயர்கேம்ப் பகுதியில் முல்லைபெரியாற்றில் இருந்து குழாய் மூலம் மதுரைக்கு குடிநீர் கொண்டு செல்ல திட்டம் தயாரிக்கப்பட்டது.
ஆனால் இதற்கு தேனி மாவட்ட விவசாயிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். திட்டம் செயல்படுத்தப்பட்டால் கம்பம் பகுதியில் உள்ள தடுப்பணைக்கு தண்ணீர் வராது. மேலும் தேனி மாவட்டத்தில் நிலத்தடி நீர்மட்டம் கடுமையாக பாதிக்கப்படும்.
எனவே இத்திட்டத்தை செயல்படுத்த கூடாது என தெரிவித்தனர். இதனை தொடர்ந்து கடந்த மார்ச் மாதம் மதுரை மாநகராட்சி அதிகாரிகள் தலைமையில் கூடலூர் நகராட்சி அலுவலகத்தில் விவசாய சங்க பிரதிநிதிகள் மற்றும் பொதுமக்கள் கருத்துகேட்பு கூட்டம் நடந்தது.
கூட்டத்தில் பங்கேற்றவர்கள் இந்த திட்டத்திற்கு கடும் எதிர்ப்பை தெரிவித்ததால் முதற்கட்ட பணிகள் தொடங்குவது நிறுத்தப்பட்டது. தற்போது இந்த திட்டம் தொடர்பாக கட்டுமான பணிகளுக்கு ஒப்பந்தம் விடப்பட்டு பணிகள் தொடங்குவதற்கு பூமிபூஜை இன்று நடைபெற்றது.
இதை அறிந்த விவசாய சங்க பிரதிநிதிகள் அதிர்ச்சி அடைந்து அதிகாரிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். வைகை அணையை தூர்வாரி மதுரைக்கு குடிநீர் கொண்டு செல்லுங்கள். இங்கிருந்து தண்ணீர் எடுத்துச்சென்றால் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் என தெரிவித்தனர். இதனால் அப்பகுதியில் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. அவர்களை அதிகாரிகள் சமரசப்படுத்தினர். #MullaperiyarDam #Farmersprotest
திருவாரூர்:
திருவாரூர் மாவட்டம் காக்காகோட்டூர் என்ற இடத்தில் சம்பா பயிர் பயிரிடப்பட்டுள்ள விவசாய நிலத்தில் இந்தியன் ஆயில் கார்பரேஷன் நிறுவனம் நரிமணத்தில் இருந்து திருச்சிக்கு பெட்ரோல் கொண்டு செல்ல கடந்த 2012 -ம் ஆண்டு பணிகள் தொடங்கி விவசாயிகளின் நிறுத்தப்பட்டது.
இந்த நிலையில் தற்போது விவசாயிகளின் அனுமதியின்றி குழாய்களை பதிக்க இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் நிறுவனம் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. இதனால் நேற்று நள்ளிரவு காக்கா கோட்டூர் கிராமத்தில் ஐ.ஓ.சி. நிறுவன அதிகாரிகள் விளை நிலத்தில் குழாய்களை இறக்கினர்.
இன்று காலை விவசாய நிலங்களில் குழாய்கள் இறங்கப்பட்டு இருப்பதை கண்டு அப்பகுதி விவசாயிகள் அதிர்ச்சி அடைந்தனர். இதனால் இறக்கி வைக்கப்பட்ட ராட்சத குழாய்களை அங்கிருந்து அப்புறப்படுத்த வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதுபற்றி அப்பகுதியை சேர்ந்த விவசாயிகள் கூறியதாவது:-
தற்போது .சம்பா பயிரிடப்பட்டு முளைத்து 20 நாட்களே ஆன பயிர்கள் இருக்கும் நிலத்தில் அத்துமீறி ஐ.ஓ.சி நிறுவனம் குழாய் பதிக்க முயல்கிறது. இதனால் மூலங்குடி, காக்காகோட்டூர், சொரக்குடி, ஓமங்களம் உள்ளிட்ட கிராமங்களில் 200-க்கும் ஏக்கரில் சம்பா பயிர் பாதிக்கும் அபாயம் உள்ளது.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
திருவண்ணாமலை:
சென்னை- சேலம் வரை 8 வழி பசுமைச்சாலை அமைக்கப்பட உள்ளது. இந்த சாலை திட்டத்தை கைவிடக்கோரி கடந்த வாரம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் திருவண்ணாமலையில் இருந்து சேலத்திற்கு நடைபயணம் மேற்கொள்ள இருந்தனர். அவர்களை போலீசார் கைது செய்து விடுவித்தனர்.
இந்த நிலையில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர் திருவண்ணாமலை காந்தி சிலை அருகில் மனித சங்கிலி போராட்டம் நடத்தினர். தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநில துணை செயலாளர் மாசிலாமணி தலைமை தாங்கினார். பொருளாளர் ராஜேந்திரன், மாநிலக்குழு உறுப்பினர் வீரப்பத்திரன் உள்பட பலர் மனித சங்கிலி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது அவர்கள் 8 வழி பசுமைச்சாலைக்கு எதிர்ப்பு தெரிவித்து கோஷங்கள் எழுப்பினர். இதையடுத்து 4 பெண்கள் உள்பட 39 பேரை போலீசார் கைது செய்தனர். #Greenwayroad #Farmersstruggle
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்